17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 30வது லீக் போட்டி நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசி 102 ரன்னிலும் அபிஷேக் ஷர்மா 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் 67 ரன்னில் ஆட்டமிழக்க கடைசியில் அதிரடியாக விளையாடிய அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியை 287 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 287 ரன்கள் குவித்து 17 வருட வரலாற்றில் மீண்டும் புதிய வரலாற்றை படைத்தது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த லீக் போட்டியில் 277 ரன்கள் குவித்திருந்த நிலையில் தற்போது அதை முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்குடன் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 42 ரன்னிலும் பாப் டூ பிளசிஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜக்ஸ் 7 ரன்னிலும் ரஜத் படிதார் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 262 ரன்கள் எடுத்தது. பின்னர் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகன் விருது சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.