லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்துள்ளன. லக்னோ மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 44வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் 8 ரன்னிலும் கேஎல் ராகுல் 76 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதுமின்றியும் தீபக் கூடா 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் 196 ரன்கள் குவித்தது.
பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 14 ரன்னில் வெளியேறினார். கடைசியில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 71 ரன்களிலும் துருவ் ஜீரல் 51 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் அணியானது 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.