தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்ன அக்ராஹாரம் பகுதியில் உள்ள தனியார் (A.B.இன்டஸ்ட்ரிஸ்) நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் முருகன் என்பவர் தான் பணி புரியும் நிறுவனத்தின் சார்பில் சென்னை, திருச்சியில் பணம் வசூல் செய்துவிட்டு மதுரையில் பண வசூல் செய்வதற்காக வந்துள்ளார்.
பண வசூல் செய்வதற்காக கையில் பணப்பையுடன் மதுரை மேலமாசி வீதி கோபாலன் கொத்தன் தெரு பகுதியில் முருகன் நடந்துசென்றபோது அந்த வழியாக வந்த டிப்டாப் நபர் ஒருவர் திடிரென முருகனை வழிமறித்து தான் காவல்துறை அதிகாரி என கூறி கையில் இருக்கும் பையில் என்ன உள்ளது என விசாரித்துள்ளார்.
இதையடுத்து பதற்றத்தில் முருகன் தன்னிடம் 3லட்சத்தி 43ஆயிரம் வசூல் பணம் உள்ளதாக கூறியுள்ளார். அப்போது அதனை கொடு சோதனையிட வேண்டும் என கூறி பையை வாங்கிகொண்டு மீண்டும் முருகனிடம் பையை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறிதுதூரம் சென்ற முருகன் பையில் உள்ள பணத்தை எடுத்துபார்த்தபோது பையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த முருகன் திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாநகர் திடீர்நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நாடக நடிகர் தன்னை போலிஸ் என கூறி டிப்டாப்பாக வந்து முருகனை அடித்து மிரட்டி சோதனை செய்வது போல நடித்து அவர் அணிந்திருந்த வேஷ்டிக்குள் பணகட்டுகளை போட்டு திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ஹரிகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் திருடிய பணம் குறித்து விசாரித்தபோது பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டேன் என கூறி தன்னிடம் 5ஆயிரம் ரூபாய் பணம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து 5ஆயிரத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் போலிஸ் என கூறி 1.5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட நாடக நடிகர் ஹரிகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக GST அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடதக்கது.