ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ் ( 23) தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வமாக இருந்திருக்கிறார். தனுஷ் அதிகளவில் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விட்டதை மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் நேற்று அவரது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் பணம் கேட்டாடிருக்கிறார். அதற்கு அவருடைய தந்தை அவ்வளவு பணம் என்னிடம் இல்லை ரூ.4 ஆயிரம் பணம் மட்டும் உள்ளது என்று கூறி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.
ரூ.4 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றிருக்கிறார். பின்பு வெகு நேரம் ஆகியும் தனுஷ் வெளியே வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறை கதவை தட்டி இருக்கிறார்கள். கதவை திறக்காததால் அவரது தந்தை சந்தேகம் அடைந்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து எப்போதிலிருந்து ரம்மி விளையாடத் தொடங்கினார் இதுவரை எவ்வளவு பணத்தை இழந்துள்ளார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.