கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
இதனிடையே தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவர்கள் போராட்டம் காரணமாக அவசரகால மருத்துவ சிகிச்சை , மருத்துவமனை பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது .
இதனிடையே கொல்கத்தாவில் மருத்துவ மாணவியின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவர்கள் , மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மருத்துவமனை வளாகத்தில் அமைதிப் பேரணியாக வருகை தந்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர் .
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சி மருத்துவர்கள் மருத்துவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , மருத்துவ மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் கொலையாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றனர்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .