செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்).
இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி இருந்தார்.
இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் காண்பிக்கப்பட்டார். அதேபோல் திரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
பல வருடங்களுக்குப் பிறகு கேப்டன் விஜயகாந்தை திரையில் கண்ட ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதேபோல் திரிஷா – விஜய் இருவரும் இணைந்து நடனமாடிய மட்ட பாடலையும் பயங்கரமாக கொண்டாடினர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்குமான வசனங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அதாவது கிளைமாக்ஸில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் “இந்த துப்பாக்கிய புடிங்க சிவா இவன நீங்க பாத்துக்கோங்க” என்று சொல்வார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் விஜயிடம், “உங்களுக்கு இதை விட முக்கியமான வேலை இருக்கு. அதனால நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்குறேன்”என்று சொல்வார்.
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதனால் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்ப வேண்டும் என்று சொல்வது போல் இந்த வசனம் இடம் பெற்று இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சதீஷ் கோட் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது “விஜய், சிவகார்த்திகேயனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்ற பிறகு அப்போது அங்கு நான் வருவேன். சிவாவிடம் உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டுமா? என்று கேட்பேன். ஆனால் அந்த சீனை எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.
இருப்பினும் இது போன்ற நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் அதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.