திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.
திருவள்ளுவர் நாடாளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 968 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 46 ஆயிரத்து 755 பெண் வாக்காளர்கள் என்று 20,57,723 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி என்பவரும் பாஜக சார்பில் பால கணபதி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என்று நான்கு பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் முக்கியமான திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை.
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் ஆகிய 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திமுக வின் கோட்டையாக இருந்து வருகிறது.
நான்கு முனை போட்டியாக இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு இணையான வேட்பாளர் ஒருவரும் இல்லை என்றே கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். அவர் பேசும் பேச்சு சித்தாந்தம் சார்ந்து அனைவரையும் ஈர்க்கும் படி இருப்பதால் அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
மேலும் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,67,292 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4,10,337 ஓட்டுகள் பெற்று 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதேபோன்று 2024 தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சுமார் 10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கி மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.
மேலும் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ஓட்டுகள் வரை பெறலாம் என்றும் பாஜக வேட்பாளர் பால கணபதியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் தலா ஒரு லட்சம் ஓட்டுகள் வரை பெறலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.