தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருந்து வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரத்தன் டாடா இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 86.
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக திகழ்ந்தவா் ரத்தன் டாடா. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.இந்நிலையில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஆனால் ரத்தன் டாடா அதனை மறுத்துவிட்டாா்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடா வெளியிட்ட அறிக்கையில் ‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். ஆகையால் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா, மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார். இருப்பினும் ரத்தன் டாடா எந்த மாதிரியான உடல்நல பிரச்சனையால் காலமானார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தான் நமமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரத்தன் டாடாவின் இறப்பைஉறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்பு செய்து தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்” என கூறியுள்ளார்.