பெண் காவலர் மீது மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய கார் ஷோரூம் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் லோகேஸ்வரி (23) என்பவர் அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேநீர் அருந்துவதற்காக இன்று காலை சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று பெண் காவலர் லோகேஸ்வரி மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெண் காவலர் லோகேஸ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் அடையாரில் செயல்பட்டு வரும் மாருதி சுசுகி கார் ஷோரூம் மேலாளர் நந்தகுமார் (29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நந்தகுமாரை கைது செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சாலையில், நடந்து சென்ற, பெண் காவலர், மீது, மதுபோதை, மோதிய ஆசாமி.