வேட்டையன் படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படமாக உருவாகியிருந்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த படத்தில் நடிகர் ரஜினி, என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி, கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். வழக்கம்போல் இந்த படத்தில் நடிகர் ரஜினி மாஸ் காட்டி இருக்கிறார். மனசிலாயோ, ஹண்டர் வந்துட்டார் போன்ற பாடல்கள் வரும் காட்சிகளில் திரையரங்குகளில் விசில் சத்தம் பறக்கிறது.
போலி என்கவுண்டர் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்த வேட்டையன் திரைப்படம் தற்போது நான்கு நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளனா்.