நடிகர் ரஜினி கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதேசமயம் கூலி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ரஜினி.
இயக்குனர் மணிரத்னம் கடைசியாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் ரஜினி, மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா, ஸ்ரீ வித்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம்தான் தளபதி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றுவரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைய இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. ஆனால் இது குறித்து பிரபல நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ரஜினி- மணிரத்னம் கூட்டணியிலான திட்டம் எதுவும் இல்லை. இது முற்றிலும் வதந்தி. இந்த தகவல் ரஜினிக்கும், மணிரத்னத்திற்கும் கூட தெரியாது” என்று கிண்டலடித்துள்ளார்.