சொந்த வீடு கட்ட திட்டமா; 30 நாட்களில் தடையில்லா சான்று தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கட்டுமான துறை சார்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வீடு கட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கானும் வகையில் கட்டுமான திட்டங்களுக்கு 30 நாட்களில் தடையில்லா சான்று வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு கட்டுமான துறை சார்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், தகுந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவை வழங்கி வருகின்றன. சென்னையை பொறுத்த வரையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை 2022ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இதன்படி, ஒரு மாதத்திற்கு சராசரியாக 70 திட்டங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி அளித்து வருகிறது. ஆனால் திட்ட அனுமதி பெறுவதற்கு முன்பாக பல்வேறு துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. குறிப்பாக மிகவும் உயரமான கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை இடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பல்வேறு அரசு துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஒற்றை சாளர முறையுடன் இணைத்து தடையில்லா சான்றிதழ் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் சிறிய வீடு கட்டுபவர்கள் தொடங்கி பெரிய அளவிலான கட்டுமான பணியை மேற்கொள்ளும் அனைவரும் பயன்பெறுவார்கள் என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாணையின் படி சுரங்கத்துறை, நீர்வளத்துறை, மெட்ரோ ரயில், வீட்டு வசதி வாரியம், தீயணைப்பு துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 11 துறைகள் 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் தடையில்லா சான்று வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 10 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அடுத்த பத்து நாட்களில் விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நாட்களில் தடையில்லா சான்று வழங்கப்படும்.
முதலமைச்சர் அவர்களின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் அளப்பரியது – கி.வீரமணி பாராட்டு
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட துறை தடை இல்லா சான்று வழங்கவில்லை என்றால் தானாகவே அவர்களுக்கு தடைஇல்லா சான்றிதழ் வழங்கப்படும் .இதுபோன்ற நடைமுறை இந்தியாவிலே தமிழகத்தில் தான் முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் அகில இந்திய கட்டிட வல்லுனர் சங்க நிர்வாகி கட்டுமான திட்டங்களை பொறுத்தவரையில் எவ்வளவு விரைவாக அனுமதி கிடைத்து விரைவாக கட்டுமான பணிகள் முடிந்தால் மட்டுமே கட்டுமான நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை எளிதாக செயல்படுத்த இந்த தடையில்லா சான்றிதழ் திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் கட்டுமான துறையை சேர்ந்தவர்கள்.