துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதி அளித்திருந்தார். அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், குறித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த பேச்சு நீதிபதிகளுக்கு எதிரானது என்று குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உத்தரவு வழங்கியிருந்தார். இந்த உத்தரவிற்கு எதிராக குருமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்திருந்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி. பி.பாலாஜி ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 12 வாரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.