நீதிமன்றத்தில் உள்ள அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.
இவர்களில் 86 ஆண்கள், 11 பெண்கள் என 97 பேர் அர்ச்சகர்கள் பயிற்சியும், 9 பேர் ஓதுவார் பயிற்சியும், 9 தவில், நாதஸ்வரம் பயிற்சி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர பாபு, கடந்த காலங்களில் முடக்கப்பட்டு இருந்த அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளையெல்லாம் புனரமைத்து கடந்த ஆண்டு 98 பேருக்கு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றனர்.
2000 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் வெற்றியாக இன்றைய தினத்தில் பயிற்சி முடித்து 115 மாணவர்கள் பயிற்சி சான்றிதழ்களை பெரும் சாதனையாக நல்ல சூழல் நிலவி உள்ளது. பெண் அர்ச்ச்கர்கள் 11 பேர் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அனைவரும் அனைத்திலும் சமம். ஆண் பெண் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் காண வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின் 11 திருக்கோவில்களில் பெண் ஓதுவார்கள் பணியாற்றி வருகிறார்கள். அதை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். என்ற அடிப்படையில் 29 அர்ச்சகர்களை திராவிடமாடல் அரசு நியமித்துள்ளது. கலை பண்பாட்டு அறிவியல் கல்லூரிகள் 9 கல்லூரிகளில் 11,535 பேர் படிக்கிறார்கள் தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலைத்துறைக்கு இயங்கும் 25 பள்ளிகளில் 10,236 பேர் படிக்கிறார்கள். 22,947 பேர் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் பள்ளி கல்லூரிகளில் படிக்கிறார்கள். இந்த பயிற்சி பள்ளிகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு வழங்கி தொடர்ந்து இந்த பயிற்சி பள்ளி கண்காணித்து வரும் துறையின் செயலாளருக்கும் , ஆணையருக்கும் மனமார்ந்த நன்றி.
யுனஸ்கோ கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் – அமைச்சர் சா.மு.நாசர்
முதுநிலை ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு கருணைத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறோம். இந்த பயிற்சியில் சேர 13 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அர்ச்சகர், ஓதுவார் நாதஸ்வர தவில் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்பை படிக்க விரும்பினால் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிரப்பப்படாமல் இருக்கும் பணிகளுக்கு முறையான நேர்காணல் நடத்தி ஆட்களை நியமித்து வருகிறோம்.
திருவண்ணாமலை தீப ஏற்பாடுகள் குறித்த பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். சூரசம்ஹார நிகழ்ச்சியை அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக திருச்செந்தூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த போதும் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்துக் காட்டினோம். அர்ச்சகர் நியமன வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, இந்த மாத இறுதிக்குள் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நீதிமன்ற தீர்ப்பு நியாயத்தின் பக்கம் அர்ச்சகர்கள் நியமத்தின் பக்கம் இருக்கும் என்றார்.
திருவண்ணாமலை தீப நிகழ்ச்சிக்கு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சிறப்பாக இந்த தீபத் திருவிழாவை நடத்திக் காட்டுவோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.