டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றிரவு நடைபெற்ற 16வது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியையும் வீழ்த்தியது. டெல்லி அணியை பொறுத்தவரை முதல் இரு ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்து நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 16 முறையும் டெல்லி அணியும் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் அய்யர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி பந்து வீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 18 ரன்னிலும் சுனில் நரேன் 85 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 54 ரன்னிலும் ரஸ்செல் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சுனில் நரேன் 85 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 272 ரன்கள் குவித்தது. பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 18 ரன்னிலும் பிரித்வி ஷா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் ஏதுமின்றியும் அபிஷேக் போரேல் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாவது களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.