10 லட்சம் முதலீடு செய்தால் 50 லட்சம் ரூபாய் வருமானம்; ஆசையை தூண்டி 10 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேர் கைது தேனியில் முதலீடு செய்த பணத்தை விட ஐந்து மடங்கு லாபம் கிடைக்கும் என மொபைல் செயலி மூலம் 10 லட்சம் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி என்.ஆர்.டி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (33) பருத்தி வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முகநூல் பக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்து விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரம் பரிந்துரைத்த வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குரூப்பில் இணைந்துள்ளார். அதில் அதிக லாபம் ஈட்டும் பங்குகள் குறித்த விபரங்கள் பதிவிட்டது மட்டுமல்லாமல், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் விளம்பரம் வழியாக கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சீனிவாசன் அவர்கள் கூறியது உண்மை என நம்பியது மட்டுமல்லாமல். அவர்கள் கூறியது போலவே ப்ளே ஸ்டோரில் CIL PLATFORM என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் அந்த செயலியில் சீனிவாசனுக்கு என யூசர் ஐடி கொடுத்தது மட்டுமல்லாமல், பத்து லட்சம் முதலீடு செய்தால் ஐந்து மடங்கு, அதாவது 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறியுள்ளனர். அதனை நம்பி கடந்த ஜனவரி மாதத்தில் பல்வேறு தவனைகளாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் ரூபாய் 10 லட்சத்தை சீனிவாசன் முதலீடு செய்துள்ளார்.
அதன்பின்னர் அவர்கள் பரிந்துரை செய்த செயலியில் லாகின் செய்ய முடியாமலும், ஒருகட்டத்தால் அந்த செயலி ப்ளே ஸ்டோரிலே இல்லை என காட்டியுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சீன்வாசன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள முகமது அலி மற்றும் முகமது யாசர் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.