11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 28 கோடியே 57 லட்சம் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கெஜட்டட் பதவி அல்லாத ரயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்தத் போனஸ் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2023-24ஆம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரயில்வே பணியாளர்கள் போனஸ் தொகையாக அதிகபட்சமாக ரூ. 17,951 பெறுவார்கள். ஆண்டுதோறும் தசரா விடுமுறைக்கு முன்பாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டும் அதே நடைமுறையை பின்பற்றி ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.
.