திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு சரக்கு ரயிலின் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகா சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் இடை இடையே நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் காரணமா? என உயர்மட்டக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் மெமு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூளூர்பேட்டை – நெல்லூர் மெமு ரயில், விஜயவாடா – சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது