சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும் அங்கு தொழில் தொடங்குவதும் பாதுகாப்பானது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திச் செலவு குறைவு என்று பல சாதக அம்சங்கள் இருந்தன. இதனால் சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டின.
இந்நிலையில் திடீரென்று சீனாவை தவிர்த்து பிற நாடுகளிலும் முதலீடு செய்யலாம் என முடிவெடுத்தனர் வெளிநாட்டு நிறுவனர்கள்.
சீனா +1 என்று இதற்கு பெயர். இந்தியா, வியட்னாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் முதலீடு செய்யலாம். இங்கும் முதலீட்டுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பு இருக்கும். உற்பத்திச் செலவு குறைவாகத்தான் இருக்கும் என முடிவுக்கு வந்து, தங்களது தொழிற்சாலைகளை முதலீடுகளை இந்த நாடுகளுக்கு திருப்பி விட்டுள்ளனர்.
இந்த சீனா + 1 நிலைப்பாடு காரணமாக வந்த பலனை இந்த நாடுகள் அனுபவித்தன. இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலைப்பாட்டின் பலனை பெருமளவில் அனுபவித்து வருவது தமிழ்நாடு தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில் சீனா +1 ஐயும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
சீனா + 1ன் ஒரு குறிப்பிடத்தக்க பயனாளியாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. “டாடா எலக்ட்ரானிக்ஸ்”, “ஜாபில் (Jabil)”, “சிஸ்கோ (Cisco)”, “வின்ஃபாஸ்ட் (Vinfast)”, “டாடா-ஜேஆர் (Tata-JLR)”, “ஹாங் ஃபு (Hong Fu)”, “போ சென் (Pou Chen)” ஆகிய நிறுவனங்களின் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கின்றன. இதன் மூலம் தமிழ்நாடு எவ்வளவு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டை ஒரு முக்கியமான உற்பத்தித் தளம் என தேர்வு செய்கின்றன” என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருக்கிறார். எலக்ட்ரானிப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னணியில் இருக்கிறது. 2021ல் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு 1.26 பில்லியன் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியாயின. அது இப்போது 10 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த அதிசயம் மூன்றே ஆண்டுகளில் நடந்திருக்கிறது.
தமிழ்நாடு உயர்தரமான மொபைல் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களைத் தாண்டி, ஆட்டோமொபைல் துறையிலும் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. டாடா மோட்டர்ஸ் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாகவும் ஹூண்டாய் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்திருக்கின்றன. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஸ்டியன் (Visteon), ஈடன் (Eaton) இசட்எஃப்(ZF), ஆட்டோடெஸ்க் (Autodesk) ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இது தவிர தோல் அல்லாத காலணி தயாரிப்புத்துறையிலும் முதலீடுகள் வருகின்றன. இந்தத் துறையில் தைவான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தோல் அல்லா காலணி உற்பத்தி நிறுவனங்களைக் குறிவைத்தது தமிழ்நாடு அரசு. அதன் விளைவாக மூன்று தைவான் நிறுவனங்கள் 5 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. அதே போல ஹான் ஃபு (Hon Fu) 1,500 கோடியும், போன் சென் (Pou Chen) நிறுவனம் 2,300 கோடியும் டீன் சூஸ் (Dean Shoes) நிறுவனம் ஆயிரம் கோடி முதலீடும் செய்ய முன்வந்திருக்கின்றன. இது தவிர ரமாடெக்ஸ் (Ramatex) 1,100 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க தமிழ்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதே வேகத்தில் போனால் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற முதலமைச்சரின் திட்டம் சுலபமாக நிறைவேறி விடும் என்பதில் சந்தேகமில்லை.