நடிகை மற்றும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இப்படம் செப்.6-ல் வெளியாக இருந்தது.
இதில் சீக்கியர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சண்டிகரின் மாவட்ட நீதிமன்றத்தில், பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ரவீந்தர் சிங் பாஸி, தாக்கல் செய்த மனுவில், இந்தப் படத்தில் சீக்கிய சமூகத்துக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாக கூறி சீக்கியர்களின் மதிப்பை கங்கனா கெடுக்க முயன்றுள்ளார் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் : “எமர்ஜென்சி படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்போம் என்றும் பொறுமையுடன் காத்திருந்து ஆதரவளித்ததற்கு நன்றி” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா்