குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார். குமரியில் , ஆறே மாதத்தில் மாமியார் கொடுமையால் மின் வாரிய அதிகாரியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுதந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் மின் வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மேட்ரிமோனி இணையதளம் மூலமாகக் கோவையைச் சேர்ந்த சுருதி (24) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
சுருதியின் தந்தை பாபு மின்வாரிய மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருவதாவும் திருமணத்தின் போது 45 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் மூன்று மாதம் சந்தோஷமாகச் சென்ற நிலையில் கார்த்திக்கின் தாயார் செண்பகவல்லி சுருதியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார்.
அதன் பின்னர் பல்வேறு கொடுமைகளுக்குச் சுருதி ஆளாகியுள்ளார். கணவர் அருகில் அமரக்கூடாது, அவரது அருகில் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது எனப் பல விதங்களில் மாமியார் செண்பகவல்லி கொடுமை செய்துள்ளார். இறுதியாகச் சுருதியை வீட்டை விட்டுச் செல்லுமாறு கடுமையாக நடந்து கொண்டுள்ளார் செண்பகவல்லி. கொடுமை தாங்க முடியாத சுருதி நேற்று தூக்கில் தொங்கியுள்ளார்.
தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாக சுருதி பெற்றோரிடம் வாட்ஸ் அப் காலில் பேசி இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாபு குடும்பத்தினர் உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல கோவையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி வந்துள்ளனர். அப்போது அங்கு அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்ததாக சுருதியின் பெற்றோர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் சுருதி பாபுவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். திருமணம் நடந்து ஆறு மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே சுருதிபாபு அழுதுகொண்டே கணவரின் தாய் குறித்து பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சுருதிபாபு கூறியுள்ளதாவது, ரொம்ப சாரிம்மா… தயவு செய்து அவரை எதுவுமே சொல்லாதீங்க. மறுபடியும் என்னை வீட்டை விட்டு போகச் சொன்னாங்க. அப்பா வீட்டுல கொண்டு போய் விடுவதாகச் சொன்னாங்க. எங்க வீட்ல கொண்டு விட்டால் நான் செத்துப் போவேன்னு சொன்னேன். அவங்க பிடிச்சபிடியா இருக்காங்க. நான் செத்தால் என் பிள்ளைக்கு வேறு யாரும் இல்லை. உனக்கு வேறு குடும்பம் இருக்கிறது என மாமியார் சொன்னாங்க. என்னை கொண்டுபோய் என் வீட்டில் விட்டுவிடு என்றார்கள். வாழாவெட்டியாக இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் என் கணவருக்கும் இந்நாள் வரைக்கும் எந்த ஒரு பிரச்னையும் ஆனதில்லை. இவங்களாலதான் பிரச்னை. என் புருஷன் பக்கத்தில நான் உட்காரக்கூடாது. பக்கத்தில உக்காந்து சாப்பிடக்கூடாது. எச்சில் தட்டை எடுத்து சாப்பிடணும்.
என் நகை எல்லாம் இரண்டு டப்பாவில் இருக்கு. அந்த இரண்டு டப்பாவையும் அவர்கிட்ட கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். உங்ககிட்ட கொடுத்திருவார். தயவு செய்து வாங்கிக்கோங்க. தமிழ்நாட்டு கலாச்சாரப்படி எனக்கு இறுதிச்சடங்கு பண்ண வந்தாங்கன்ன அது தேவை இல்லை. தயவுசெய்து அப்பிடி பண்ண விட்டுராதீங்க. அவங்க முறைபடி எதுவும் நடக்கக்கூடாது. கோயம்புத்தூர் கூட்டிட்டு போங்க, இல்ல இங்கேயே பண்ணுங்க. இவங்க சொல்றபடி ஒரு மண்ணும் பண்ணி கிழிக்க வேணாம். அம்மா, தங்கையின் கல்யாணத்துக்கு எதாவது பண்ணணும்னு இருந்ததுமா. நான் இல்லன்னா என்னோட நகைய அவளுக்குக் கொடுத்திருங்க. அவளைக் கொஞ்சம் பாத்துக்கோங்க. சாரிம்மா, நான் வாழாவெட்டியா இருக்க வேணாம்மா. திரும்பவும் என்னை வீட்டவிட்டு வெளிய போன்னு சொன்னாங்க. அதனாலதான் போறேன் என்று இவ்வாறு அந்த ஆடியோவில் சுருதி பாபு உருக்கமாகப் பேசியுள்ளார்.