பொன்னேரி G.பாலகிருஷ்ணன்
மது ஒழிப்பு என்ற குரல் இன்று, நேற்று அல்ல ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட, உலக பொதுமறையான திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் அவர்களே, தான் இயற்றிய 133 அதிகாரத்தில் கள்ளுண்ணாமை என்ற ஒரு அதிகாரத்தின் வாயிலாக மதுப்பழக்கத்தை ஒழிக்க கூடிய, மது ஒழிப்பு முழக்கத்தை செய்திருக்கிறார். அந்த தெய்வ புலவராம் திருவள்ளுவரின் குரலின் எதிரொலியாக தான், இன்று திருமாவளவன் அவர்களின் வாயிலாக, மது ஒழிப்பு என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு முந்தைய காலகட்டத்தில் கூட நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்தே, நீதிக் கட்சி தலைவர்கள் பலரும், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், இந்திரா காந்தி, உள்ளிட்ட தலைவர்களும் மது ஒழிப்பிற்கு ஆதரவாக முழுக்கமிட்டு இருக்கிறார்கள்.
அதிலும், தற்போது நமது தமிழகத்தில் மதுவை ஒழிக்கவே முடியாது என்ற எண்ணம் ஆட்சியாளர்கள் முதல் பாமரமக்கள் வரை அனைவரின் ஆழ்மனதிலும் புரையோடி போய் இருக்கின்றது. இப்படிப்பட்ட இன்றைய சூழ்நிலையில் தான், திருமாவளவன் அவர்கள் தன்னுடைய மது ஒழிப்புக் குரலை தேசிய அளவில் ஒலிக்க செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தனது உரத்த குரலால் முழக்கமிட்டு கொண்டு இருக்கிறார். குரல் கொடுப்பதுடன் அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள் நடத்தியதோடு நின்றுவிடாமல், இன்று பெண்களை ஒருங்கிணைத்து, மது ஒழிப்பிற்கு ஆதரவாக மகளிர் மாநாடும் நடத்தி வருகிறார்.
இதன் மூலம், அவர் தேசிய அளவில் மதுவின் பிடியில் சிக்கித் தவிக்கும் சாதி, மதம், இனம் கடந்து உழைக்கும் ஏழை – எளிய மக்களை மதுவின் பிடியில் இருந்து மீட்க துடிக்கிறார் என்பது நன்கு தெரியும். இதை உணராத சில அரைவேக்காடு அரசியல்வாதிகள் மது ஒழிப்பு என்பது ஏதோ மாநில அளவில் பேச வேண்டிய வார்த்தை எனவும், அதை திருமாவளவன் தேசிய அளவில் பேசுவது அறியாமை எனவும் அதிபுத்திசாலிகள் போல் பேசுகிறார்கள்.
இதில், உண்மை நிலவரம் என்னவென்றால், சுதந்திரம் அடைவதற்கு முன்பு சென்னை மாகாணமாக இருந்த போதும், சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாநிலமாக பிரித்ததற்கு பின்பும் இந்திய அளவில் மதுவிலக்கு இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் நடைமுறையில் இருந்தது. ஒன்று காந்தி பிறந்த மண்னான குஜராத்திலும் மற்றொன்று தமிழகத்தில் மட்டும் தான், இந்த நிலையை மாற்றி தமிழகத்தில் மது என்னும் அரக்கன் உறுதியாக இன்று வரை காலூன்றி நிற்பதற்கு காரணம், தேசிய அரசியல் தலையீடுதான். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 1971 ம் ஆண்டு தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் “இந்திய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களில் ஏற்படும் நிதி இழப்பை ஒன்றிய அரசு வழங்கும்” என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள், “தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால், ஆண்டிற்கு 29 கோடி அளவிற்கு நிதி இழப்பீடு ஏற்படுகிறது எனவும், அந்த நிதி இழப்பீடை தங்கள் அறிவிப்பின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்” எனவும், வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரதமர் இந்திரா காந்தியோ, “என்னுடைய அறிவிப்பிற்கு முன்பாகவே மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் மாநிலங்களுக்கு, இந்த அறிவிப்பு செல்லாது” என கூறினார். அப்போது சதுர்யமாக சிந்தித்த முதல்வர் கருணாநிதி அவர்கள், தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்துவிட்டு சில காலம் நடைமுறைப்படுத்திய பின்னர், மது விலக்கை மீண்டும் கொண்டு வந்தால், ஒன்றிய அரசின் நிதி இழப்பீடு தமிழகத்திற்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில், தமிழகத்தில், 1971 ம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்தார்.
கருணாநிதியின் இந்த சாதுரியமான சதுரங் ஆட்ட முடிவிற்கு வலு சேர்க்கும் வகையில், கோவையில் நடந்த திமுக மாநாட்டில், தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை எம்.ஜி.ஆர் உட்பட அனைத்து திமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர், 1972 ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர் ல் தனிக்கட்சி துவங்கிய பிறகு, அண்ணா நாளிதழில்,
“தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வந்து, அதை என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை கடைப்பிடிப்பேன் என்றும், எனது அன்னையின் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் ” எனவும், கூறியிருந்தார். ஆனால், பின்னர் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆனந்த விகடன் பத்திரிக்கையில், அவர் எழுதிய, “நான் ஏன் பிறந்தேன்” என்ற தொடர் கட்டுரையில், “தமிழகத்தில் அதிக அளவில் கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளது எனவும், அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் கள்ளச்சாராயம் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது. அதனால், அதிக அளவில் மக்கள் குடித்து உயிரிழக்கின்றனர். ஆகவே, தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்கிறேன் ” என்று கூறியதுடன், 1981ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சாராயக்கடைகளை எம்.ஜி.ஆர் திறந்தும் வைத்தார். மேலும், அப்போதைய சாராய வியாபாரிகளாக இருந்த பலர் தங்களுடைய சாராய வியாபாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஏற்று, 1987-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் கள்ளு கடைகள் அனைத்தையும் இழுத்து மூடினார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சாராய கடைகளை மூடிவிட்டு, தமிழகத்தில் மலிவு விலை மதுபானக் கடைகளை திறந்து வைத்தனர். ஜெயலலிதா அவர்கள் ஒரு படி மேலே போய் 2004 ம் ஆண்டில் இருந்து மதுபான கடைகள் அனைத்தையும் அரசுடைமைகளாக மாற்றி அமைத்து, மதுபானங்கள் மூலம் வரக்கூடிய வருவாய் அனைத்தும் அரசுக்கு நேரடியாக வரும் வகையில் செய்தார். அன்று நான்கு ஆயிரம் கோடியில் துவங்கிய மதுபான விற்பனை, இன்று 55 ஆயிரம் கோடியில் வந்து நிற்கின்றது.
இந்நிலையில் தான், தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்த கொடுமையை நேரில் கண்டு மனம் நொந்துபோன, திருமாவளவன் அவர்கள், “இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் இருக்கிறது. சாதி, மதம், இனம் கடந்து அனைத்து ஏழை-எளிய மக்களும் மது என்னும் அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.” எனவே, மதுவிலக்கை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலுவாக குரல் கொடுக்க தொடங்கினார்.
மேலும், அவர் சொல்வது போல், தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வருவதை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் அனைவருடைய விருப்பமாகவும் இருந்து வருகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் தான் பெரிய சிக்கல் நிலவி வருகிறது. அதற்கு காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும்,
மதுபான விற்பனையின் மூலம் வரக்கூடிய அந்த வருவாயை எதிர்நோக்கி தான், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக, தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதாக உள்ளது. அந்த திட்டங்களை தொடர்ந்து நடைமுறை படுத்துவதற்காகவாவது தமிழ்நாட்டில் மது விற்பனை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஆகவே தான், திருமாவளவன் அவர்கள் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றால், 1971ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெறும் 8,000 கோடியில் பட்ஜெட் நிறைவேற்றி அதிலிருந்து மாநிலங்களுக்கு மதுவால் ஏற்படும் நிதி இழப்பை தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார் என்ற நிலையில், தற்போது பலமுனை வரிகளை மக்கள் மீது திணித்து கொள்ளையடிக்கும் பணத்தை கொண்டு.
இந்த ஆண்டு 39 லட்சம் கோடியில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து திட்டங்களை வகுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு மாநிலங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஊக்கம் அளிக்கும் வகையில், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் மாநிலங்களின் நிதி இழப்பீட்டை சரி செய்யும் வகையில், நிதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைநோக்கு பார்வையுடன் ஒரு நல்ல முடிவு எடுத்து தேசிய அரசியல் பாதையில் பயணிக்க துவங்கியிருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தேசிய அளவில் மது ஒழிப்பிற்கு ஆதரவாக தொடர் முழக்கமிட்டு கொண்டிருக்கிறார். இதை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில அரைவேக்காடு அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.