இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 66,134 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். ஆனால் 2024- ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 25,000 கோடி ரூபாயை வெளியே எடுத்த அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 1,539 கோடி ரூபாயை மட்டுமே முதலீடு செய்திருக்கின்றனர்.
ஆனால் மார்ச் மாதத்தின் தொடக்கம் முதல் 15- ஆம் தேதி வரையிலான நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் 40,710 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவைச் சந்திருந்த நிலையில், அந்நிய முதலீடுகள் குவிந்து வருகின்றனர்.
இதற்கு நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 8.4% ஆக வளர்ச்சி அடைந்துள்ளதாக வெளியான புள்ளி விவரங்களில் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரம், கடன் பத்திரங்கள் சந்தையில் 10,383 கோடியை வெளியே எடுத்துள்ளது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.