மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. குஜராத், கா்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், டையூ டாமன், கோவா உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாக்களித்தார். காந்திநகா் தொகுதிக்கு உள்பட்ட அகமதாபாதிலுள்ள வாக்குச்சாவடிகளில் பிரதமா் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.