நேற்று (அக்டோபர் 6) இந்திய விமானப்படையின் 92 வது கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு வகையான விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட்டன. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரைக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விமான சாகசங்களை காண மக்கள் பலரும் படையெடுத்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த வகையில் உலகத்திலேயே அதிக மக்கள் பார்த்து ரசித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் தான் அந்த துயர சம்பவமும் நடந்தது. அதாவது மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்ட நிலையில் 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான சாகச நிகழ்ச்சிக்காக போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்கு காரணம் என அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான ரத்னகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “எளிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடம் மெரினா. அங்கு காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் வார இறுதியில் ஏர்ஷோ பார்க்க கூடும் கூட்டத்தின் அளவை சரியாக கணித்திருக்க வேண்டும். இன்னமும் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்க்கும் 5 அப்பாவி மக்களின் உயிர்கள் போயிருக்கின்றன. கூட்டத்திற்கு பயந்தே நான் இந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. இது ஆரோக்கியமான உணர்வும் அல்ல. கேலிக்கைக்கு கூட்டம் கூடவே பயம் ஏற்பட்டால். நாளை ஞாயத்திற்கு எவ்வாறு கூடுவார்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.