நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறை சம்மன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிக பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில்துறை பிரிவு தலைவரான கோவர்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை இட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர்.
இது தொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் அவர் கடிதம் அனுப்பினார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
https://www.mugavari.in/news/india-news/teslas-plan-to-set-up-plant-in-india-stalled/1905
இது தொடர்பாக சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மே 2 ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது அல்ல என பலமுறை கூறிவிட்டதாகவும் அரசியல் சூழ்ச்சி காரணமாகவே தனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.