சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் 25-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு வராவிட்டால் சம்பளம் பிடித்தம், பணி நீக்கம் உள்ளிட்ட
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, கணேசன் ஆகியோர் இணைந்து சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில், நாளை மறுநாள் சாம்சங் நிறுவனத்திடமும், தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.