இஸ்லாமியர்களின் வரலாற்றை நிராகரிக்கும் உத்தரபிரதேச பாஜக அரசு
யுனெஸ்கோ அங்கீகரித்த புராதன ஃபதேபூர் சிக்ரி கோட்டையை கண்டுக்கொள்ளாத உ.பி. அரசு
மதசார்பற்று கலாச்சார சின்னங்களை பாதுகாக்க மக்கள் கோரிக்கை
முகலாயர் கட்டிடக்கலையும் ராஜ்புத் கட்டிடக்கலையும் ஒருங்கிணைந்த கலாச்சார கலவையாக அமைந்த வரலாற்று பெருமைகொண்ட ஃப்தேபூர் சிக்ரி கோட்டையின் தற்போதைய நிலை குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் உள்ளது ஆக்ரா மாவட்டம். ஆக்ரா என்றாலே தாஜ்மகாலும், ஆக்ரா கோட்டையும் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் ஆக்ராவில் கோட்டையும், தாஜ்மகாலும் கட்டமைக்கப்படும் முன்னரே முகலாயர் ஆட்சியின் தலைமையிடமாக திகழ்ந்தது ஆக்ராவில் இருந்து 37 கி.மீ தெற்கில் அமைந்துள்ள ஃபதேபூர் சிக்ரி.
1569ம் ஆண்டு முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட நகரமான ஃபதேபூர் சிக்ரியில், கோட்டையும், முகலாய மன்னர்களின் வாழ்விடங்களும், நுழைவாயில்கள் என நகரம் முழுவதுமே வரலாற்றின் எச்சங்களாக காட்சியளிக்கும் இந்த இடம் யுனெஸ்கோவால் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா கோட்டையில் ஆட்சி செய்துவந்த அரசர் அக்பருக்கு, சூஃபியாக இருந்த ஷேக் சலிம் சிஸ்டி கூறியதன்படி, 1569-ம் ஆண்டில் சிக்ரியில் அக்பருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனே பிற்காலத்தில் முகலாய மன்னர்களுள் ஒருவரான நூருத்தீன் சலீம் ஜஹாங்கிர். சூஃபி ஷேக் சலிம் சிஸ்டியை கௌரவிக்கும் விதமாக அவரின் பெயரையே தன் மகனுக்கு வைத்த அக்பர், குழந்தை பிறந்த இடமான சிக்ரியில் ஒரு அரண்மனையை அமைத்து, ஃபதேபூர் சிக்ரி என பெயரிட்டார், அதற்கு வெற்றியின் நகரம் என்று பொருள்.
சுமார் 20 ஆண்டுகள் முகாலாயர் ஆட்சியின் தலைமையிடமாக திகழ்ந்த இந்த கோட்டையில், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ், இபாதத் கானா, பாஞ்ச் மஹால், சலீம் சிஸ்டியின் சமாதி, ஜமா மஸ்ஜித், ஜோதா பாய் அரண்மனை, மரியம்-உஸ்-ஜமானி அரண்மனை என 15-க்கும் மேற்பட்ட சிறப்பு மிக்க கட்டிடங்கள் காணப்படுகின்றன.
1571 மற்றும் 1585ல் உருவாக்கப்பட்ட இந்த நகரத்திலிருந்து அருகேயுள்ள ராஜஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்ட செயற்கை நீர்தேக்கம் கோடை காலத்தில் முற்றிலும் வற்றிப்போனதால், தண்ணீர் பற்றாக்குறையால் முகலாயர் ஆட்சியின் தலைமையை அரசர் அக்பர் லாகூருக்கு மாற்றினார்.
450 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதும் குடிநீர் பிரச்சினை காணப்படுவதாகவும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆண்ட முகலாயர்களில் முக்கிய அரசரான அக்பரின் ஆட்சியில், முக்கியமானதொரு வரலாற்று எச்சமான ஃபதேபூர் சிக்ரி தற்போது பராமரிப்பின்றி, மதம் சார்ந்த பார்வையினால் கண்டுகொள்ளப்படாமல் சிதைந்து வருவதாக உள்ளூர் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஃபதேபூர் சிக்ரி மிகவும் பழமையான நகரம், மூன்றாவது முகலாய பேரரசின் தலைநகரமாக இது செயல்பட்டது. குடிநீர் பிரச்சினை காரணமாக இந்த நகரம் கைவிடப்பட்டது. இப்பொழுதும் அந்த பிரச்சனை உள்ளது, கொரோனா தொற்றுக்கு பின் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை விரைவாக குறைந்துள்ளது. மேலும், ஆக்ராவில் இருந்து ஃபதேபூர் சிக்ரி வரும் வழியில் பல இடங்களில் சிறிய அளவிலான சாலைகள், கிராம குடியிருப்புகள் உள்ளதால் போக்குவரத்து சிரமம் உள்ளதாக கூறினார்.
அருகேயுள்ள ராஜஸ்தான் மாநில அரசும், மக்களும் அவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதில் முக்கியத்துமாக இருக்கின்றார்கள். அதேபோல் உ.பி மாநில அரசும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசு இதில் வேகமாக செயல்படுவதில்லை, என குற்றம்சாட்டினார்.
உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லையில் அமைந்துள்ள ஃபதேபூர் சிக்ரி கோட்டையும், அதன் கட்டமைப்பும், சிற்பங்களும் இரு மாநில கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்து ராஜபுத் வம்சத்தைச் சேர்ந்த அரசி ஜோதாபாயை மணமுடித்தாத் அக்பர். ஜோதாபாய்காக ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் இந்து கோவிலும், வழிபாட்டுதளமும், இந்து கடவுள்களின் ஓவியங்களும், சைவ உணவு சமைக்கும் சமையலறையும் உருவாக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மத ஒற்றுமையை தாங்கி நிற்கிறது. ஆனால் தற்போதுள்ள உ.பி மாநில பாஜக அரசு இஸ்லாமியர்களின் அடையாளங்கள் என்பதாலும், முகலாயர்களின் வரலாறு என்பதாலும் இதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்று உள்ளூர் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குளிர்காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருந்தார்கள், 450 வருடங்களுக்கு முன்பாக செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் இருந்தது, தற்போது அவை முற்றிலுமாக வற்றிவிட்டது, மத்திய மாநில அரசுகள் இந்த செயற்கை நீர்த்தேக்கத்தை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
நான் குறிப்பிட்ட கோவில்களை பற்றி பேசவில்லை, ஃப்தேபூர் சிக்ரி, தாஜ்மஹால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலக அளவில் பிரபலமாக இருந்துவருகிறது. அயோத்தி ராமர் கோவில் இப்போதுதான் உலக அளவில் பிரபலம் அடைந்திருக்கிறது. அதைப்போல் இந்த கோட்டையை உத்தரபிரதேச அரசு கவனிக்க வேண்டும், என்றார்.
சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை, உலக அளவில் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அவசரகால ஆம்புலன்ஸ், குடிநீர், உட்பட எந்த வசதியும் இல்லை. பல ஜனாதிபதிகள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் இங்குவந்து ஃபதேபூர் சிக்ரியை பார்த்து சென்று இருக்கிறார்கள், என்றார்.
விஜய்கர்க் மண்டலம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் உ.பி மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த ஃப்தேபூர் சிக்ரி கோட்டை, இஸ்லாமிய முகலாய பேரரசர்களின் கட்டிடக்கலை மட்டுமல்லாது, பாரம்பரியமிக்க ராஜ்புத் வம்சத்தின் கட்டிடக்கலையும், அதன் பாரம்பரியத்தையும் மத ஒற்றுமையும் தாங்கி நிற்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மத ஒற்றுமையை வலியுறுத்திய இந்த கோட்டையை, மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் கவனிக்க வேண்டியது வரலாற்றின் அவசியமாகிறது.