லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 47 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 48வது லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 48வது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. முதலாவது பேட்டிங்கில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இரண்டாவது பேட்டிங் விளையாடிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்தினால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது அபராதமாகும். ஏற்கனவே கடந்த ஏப்ரல்-18 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு போட்டியில் மெதுவாக பந்துவீசினால் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை விதிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.