டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி பவர் பிளேயில் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து 17 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்துள்ளது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 34 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 35வது லீக் போட்டி நடைபெறுகிறது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 35வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கினர். தொடக்க ஓவர்களிலிருந்தே அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சேர்ந்து 6 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் குவித்து 17 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்தனர். இதற்கு முன்பு கொல்கத்தா அணி கடந்த 2017 ஆம் ஆண்டில் பெங்களுர் அணிக்கு எதிராக 6 ஓவர்கள் முடிவில் 105 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஐதராபாத் அணி முறியடித்துள்ளது.