ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் குவித்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 49 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 50வது லீக் போட்டி நடைபெற்றது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 50வது போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 12 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரித் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய நிதிஷ்குமார் ரெட்டி 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் குவித்தது. பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.