பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் வம்சாவளியில் வந்த உமா குமரன் வெற்றி அடைந்தார்.
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழர் வம்சாவளியில் வந்த உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றுள்ளார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு உமா குமரன், “உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.
பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 8 பேர் போட்டியிட்ட நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தலில் ஈழத் தமிழரான உமா குமரன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.