வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருமை வாக்காளப் பெருமக்களே! நடக்கவிருக்கும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் என்பது மிகவும் அதிமுக்கியமான ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான மோடி ஆட்சி என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடிய எதேச்சதிகார ஆட்சியாகும். 1. அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மையைத் தகர்க்கக் கூடியதாகும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை இப்பொழுது பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. 2. பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியா என்ற ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் நாட்டை, தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அடிப்படையில் ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்‘ என்று ஆக்குவதைத் தனது கொள்கை அறிவிப்பாகவே கூறி வருகிறது.
3. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்கு மாறாக, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பது, குறுக்கு வழிகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து பி.ஜே.பி. ஆட்சியாக மாற்றுவது – அதற்காகப் பணம், பதவி மற்றும் திரிசூலங்களான வருமான வரித்துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்துவது என்பதே பாசிச பா.ஜ.க.வின் பச்சையான அணுகுமுறையாக உள்ளது. 4. ‘‘மதச்சார்பின்மை’’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டக் கோட்பாட்டின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தி, ஹிந்து ராஜ்ஜியம் என்பது, ராமர் கோவில் கட்டுவது, குடியுரிமைப் பறிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை வெளியேற்றுவது, மக்கள் உண்ணும் உணவு, உடைகளில்கூட மதவாத மூக்கை நுழைப்பது எல்லாம் பி.ஜே.பி. ஆட்சியின் அன்றாட அவலமாகி விட்டன. ஆகஸ்டு 15, சுதந்திர நாளில் ஒன்றிய அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற ‘‘மதச்சார்பின்மை’’ (செக்குலர்) என்ற சொல்லையே நீக்கி வெளியிடுவது.
5. அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘சோசலிஸ்டு’ என்பதற்கு மாறாக, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது – கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்வது, தொலைப்பேசித் துறை, துறைமுகம், விமான நிலையம் போன்ற முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் ‘சோசலிஸ்டு’ என்ற அம்சத்தை செல்லாக் காசாக்குவது. 6. அரசமைப்புச் சட்டத்தில் முக்கியமான சமூகநீதியை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது – குறிப்பாக, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருந்து வந்த இட ஒதுக்கீட்டில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத, நீதிமன்றங்களால் ஏற்கப்படாத பொருளாதார அளவு கோலைத் திணிப்பது (எடுத்துக்காட்டு EWS), சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை ரத்து செய்வது – இன்ன பிற வகைகளில் எல்லாம் சமூகநீதிக்குச் சவக் குழி வெட்டுவது – இவைதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கொள்கையும், செயல்பாடுகளுமாகும்.
7. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரால் ‘பண மதிப்பு இழப்பு’ என்ற பெயரில் ஒரே நள்ளிரவில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி தன்னிச்சையாக அறிவித்ததன் மூலம் ஏற்பட்ட குழப்பமும், நலிவும் சாதாரணமானதல்ல. கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கியதுதான் கண்ட பலன். புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்து, அதையும் பிறகு செல்லாது என்று அறிவித்த கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது! ரூபாய் மதிப்பு இழப்பால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசிந்து போய், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வருவாயின்றி, தற்கொலை அளவுக்கு விரிந்த கொடுமையை எளிதில் மறக்க முடியுமா? இத்தகைய பாசிச கொடுங்கோல் ஆட்சி நீடிக்கலாமா? என்பதை வாக்காளப் பெருமக்களே, சிந்தியுங்கள் – இந்த ஆட்சியை நீடிக்கவிட்டால் ஏற்படும் அபாயத்தை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்து, இந்த பாசிச பா.ஜ.க. ஆட்சியை விரட்டியடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.