கருணாநிதி’ பெயரில் ₹100 நாணயம் வெளியிட அனுமதி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த வருடம் கோரப்பட்டிருந்தது. இந்நாணயத்தை, கடந்த ஜுன் 3-ல் முடிந்த கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்தது.
பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது காரணமானது. தற்போது இவை அனைத்தும் முடிந்து நேற்று நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பம் இட்டதாகத் தெரிகிறது.
இந்தியாவில் மத்திய அரசால்நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964-ல்துவங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்பெயரில் முதல் நினைவு நாணயம் வெளியானது. இந்தநினைவு நாணயங்கள் முக்கியத்தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக தொடர்ந்து வெளியாகின்றன.
இவற்றை, மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்துவெளியிடுகிறது. மு.கருணாநிதி உட்பட 3 நாணயங்கள் குறித்த உத்தரவை மத்திய அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.