தமிழ்நாடு

பெண்ணிய உரிமை என்று முழுமைபெற்ற தமிழ்த்தேசிய இயக்கமாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது – சீமான்!

பெண்ணிய உரிமை என்று முழுமைபெற்ற தமிழ்த்தேசிய இயக்கமாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழின வரலாற்றில் மிக முக்கியக் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த தமிழ்ப்பேரினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அல்லலுற்று நிற்கின்றது. தமிழர்கள் தங்களுடைய மொழியுரிமை, மண்ணுரிமை, இன உரிமையை அயலாரிடம் இழந்து பண்டைய பெருமை இழந்து பாழ்பட்டுக் கிடக்கின்றனர். அதை மீட்கும் போராட்டத்தில் 2009 இல் ஈழத்தில் 2 இலட்சம் சொந்தங்களை நாம் நம் கண்முன்னே இழந்தோம். தாய் தமிழ்நாட்டிலோ அயலார் ஆட்சியின் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆரிய – திராவிட அரசியல் சூழ்ச்சியில் சிக்கிக் கடந்த 60 ஆண்டுக் காலமாக தமிழர் தம் ஆளும் உரிமை இழந்து ஆட்சி அதிகாரம் இன்றி அரசியல் விடுதலை பெறாத அடிமை தேசிய இனமாக உள்ளோம்.

அதிலிருந்து மீண்டு, அடிமை விலங்கை உடைத்தெறிந்து உலகின் மற்ற தேசிய இனங்களைப்போல அனைத்து உரிமைகளும் பெற்ற மதிப்புமிக்க இனமாக நாமும் திகழ, நம்மை நாமே ஆள்வதுதான் இறுதித் தீர்வாகும்; நம் இனத்தைச் சூழ்ந்துள்ள அனைத்து துன்ப பூட்டுகளுக்குமான சாவியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றே இருக்கின்ற இறுதி வாய்ப்பாக நம்முன் உள்ளது. அதனை இலக்காகக்கொண்டே, ‘இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை’ என்ற இலட்சிய முழக்கத்துடன் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை நோக்கிய அரசியல் பயணத்தை இன்றுவரை சமரமின்றித் தொடர்ந்து வருகின்றது. தமிழ் நில உரிமைக்காக, மொழி உரிமைக்காக, அரசியல் உரிமைக்காக என்று நம் முன்னவர்கள் தனித்தனியாகப் போராடிய நிலையில் அவற்றை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணிய உரிமை என்று முழுமைபெற்ற தமிழ்த்தேசிய இயக்கமாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.

அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்காக கடந்த 14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து வரும் சனநாயக அரசியல் புரட்சியில் மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. தமிழிளம் தலைமுறையின் நம்பிக்கையைப் பெற்று அவர்கள் அதிகம் இணையக்கூடிய அரசியல் ஆற்றலாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. ஆனால், இடையில் எத்தனை எத்தனையோ கேலிகள், கிண்டல்கள், அவதூறு விமர்சனங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என பற்பல தடைகளை நாள் தோறும் நாம் எதிர்கொள்கிறோம். தமிழர் நிலத்தில் தமிழ்த்தேசிய அரசியல் வென்றுவிடக்கூடாது, தமிழர் கையில் அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நம்மை அழிக்கத் துடிக்கின்றனர்.

ஊடகங்களில் அவதூறு பரப்புரை, என்ஐஏ விசாரணை, சின்னம் பறிப்பு என எத்தனை தடைகள் வந்த போதிலும் அவற்றையெல்லாம் சகித்து, சமாளித்து நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வீறு நடைபோட முழுமுதற் காரணம் என்னுடைய அன்புத் தம்பி, தங்கைகளாகிய நீங்கள்தான். சந்திக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் எதிரிகளால் கணிக்க முடியாத வளர்ச்சியைப் பெற்றுவரும் நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டில் தொடரும் இந்திய – திராவிட அரசியல் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதுவதற்கான முதல்வரியாக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் உங்கள் ஒவ்வொருவருடைய கடின உழைப்பையும் நான் அறிவேன். அரும்பாடுபட்டு அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய எல்லையற்ற அன்பும், பாராட்டுகளும்.

இந்தத் தேர்தல் பரப்புரையின்போது எனது கண்ணில், எனது குரலில் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் சோர்ந்தும், தளர்ந்தும் இருந்துவிடாது நான் தொடர்ந்து பரப்புரை பணிகளை மேற்கொள்வதைக் கண்டு நீங்கள் எந்த அளவிற்குத் துடிதுடித்துப்போனீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். என்னுடைய தனிப்பட்ட நலனைவிட நம் இனத்தின் நலனைத்தான் நான் முதன்மையாக கருதுவேன் என்பதை நீங்களும் அறிவீர்கள். அண்ணா கண்களைக் கவனியுங்கள்; அண்ணா குரலைக் கவனியுங்கள்; அண்ணா உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள், என்ற உங்களது ஆறுதல் வார்த்தைகள் எனக்குத் தேறுதலை தராது. மாறாக உங்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பே என்னுடைய உள்ளத்திற்கு ஊக்கத்தையும், உடலுக்குப் பன்மடங்கு பலத்தையும் கொடுக்கும். பரப்புரை பணிகளில் என்னுடைய உழைப்பை நீங்கள் அறிவீர்கள்; அதுபோன்ற உழைப்பினை உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் உரிமையோடு எதிர்பார்க்கிறேன்.

இது என்னுடைய பணி மட்டுமே அல்ல; நம் ஒவ்வொருவரின் பணி. சீமான் ஒருவன் கடுமையாக உழைப்பதாலேயே நாம் வென்றுவிட முடியாது. சீமானை விடவும் அவன் தம்பி தங்கைகள் கடுமையாக உழைப்பார்கள், உழைக்கிறார்கள் என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு செயல்படும்போது நாம் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே, தேர்தல் பரப்புரை பணிகளில் ஈடுபட்டதோடு நம்முடைய பணிகள் நிறைவுபெற்றுவிடவில்லை என்பதை அன்பு தம்பி தங்கைகள் உணருங்கள். குருதியை வேர்வையாகச் சிந்தி அரும்பாடுபட்டு உழைத்து வளர்த்த பயிர்களை அப்படியே விட்டுவிட்டு எந்த வேளாண் பெருங்குடி மகனும் சென்றுவிடுவதில்லை. பயிர்களை அறுவடை செய்து வெள்ளாமையைப் பத்திரமாக வீடு வந்து சேர்க்காமல் எந்த விவசாயியும் உறங்கச் சென்றுவிடுவதில்லை.

அதைப்போலவே இத்தனை நாட்கள் வேகாத வெயிலில் மக்களைச் சந்தித்து அவர்கள் மனதில் மாற்றத்தை விதைத்து நாம் பெறப்போகும் வாக்குகள் சிந்தாது சிதறாது மைக் சின்னத்தில் இடுவதை உறுதிசெய்யும்போதுதான் நம்முடைய பணிகள் முழுமைபெறும். வரலாறு நமக்கு அளித்திருக்கும் இறுதி வாய்ப்பு இது.
நம்முடைய அடுத்த தலைமுறையையும் நம்மைபோல் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடவிடாமல், நிம்மதியான நல்வாழ்வினை வாழ்ந்திட இரவு பகல் பாராது கண் அயராது நாம் கடுமையாக உழைக்க வேண்டிய நேரமிது. ஆகவே, என் அன்பிற்கினிய உறவுகள் அனைத்து வாக்ககத்திற்கும் முழுமையாக முகவர்களை நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை களத்திற்கு வர இயலாதவர்கள், உறவினர்கள், நண்பர்கள், தெருவில் – ஊரில் வசிக்கும் நமது ஆதரவாளர்கள் என அனைவரையும் நேரிலோ அல்லது அலைபேசியிலோ அழைத்துப்பேசி, எந்த ஒரு வாக்ககத்திலும் முகவர்கள் விடுபட்டுவிடாமல் முழுமையாக நிரப்ப வேண்டும்.

நியமிக்கப்பட்ட வாக்கக முகவர்கள் தேர்தல் நாளான 19.04.24 அன்று காலை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன் உரித்த நேரத்தில் சென்று, மாலை வாக்குப்பதிவு முழுமையாக முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது தேர்தல் ஆணைய முத்திரையிட்டு உள்ளே வைக்கும் வரை வாக்ககத்தின் உள்ளிருந்து, ஆளும் ஆண்ட கட்சிகள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடுவதைத் தடுப்பதோடு, நமக்கான வாக்குகள் நம்முடைய மைக் சின்னத்தில் பெறப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை இந்த நொடி முதல் முழு வீச்சில் என்னுடைய தம்பி, தங்கைகள் தொடங்கி விரைந்து செய்து முடிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Raj

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை