சென்னையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனையை நடத்திய வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள். பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு உத்திகளை கற்று கொடுத்த தீயணைப்பு துறையினர்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 78 வாகனங்களில் முதற் கட்டமாக 48 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை செய்யப்பட்டது.
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், கோட்டாட்சியர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சோதனையில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல் உதவி ஆணையர் கனகராஜ், தீயணைப்பு துறை அதிகாரி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, முன்பக்கம் மற்றும் பின்பக்க அதிநவீன கேமராக்கள், முதலுதவி பெட்டிகள், அவசர காலத்தில் வெளியேறும் வழி, படிகட்டுகளின் தரம், வேக கட்டுப்பாட்டு கருவி உட்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது கண்டறியபட்ட குறைகளை அதன் பள்ளி நிர்வாகம் சீர் செய்து மீண்டும் மறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
முன்னதாக திடீரென வாகனங்களில் தீப்பிடித்துக் கொண்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்ற செய்முறை விளக்கமும் தீயணைப்புத்துறை சார்பில் செய்து காண்பிக்கப்பட்டது.