தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இதுவரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். இதில் தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகத்தில் இரவு 7 மணி வரை தற்போது 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தற்போது பதிவாகியுள்ள வாக்குகளில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75.67% வாக்குகளும், அடுத்ததாக தர்மபுரி 75.44% வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் தென் சென்னை 67.82% வாக்குகளும் பதிவாகியுள்ளன.