கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். கதிர் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தொடர்ந்து வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் டிஜே ஞானவேல், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர். அத்துடன் படக்குழுவினருக்கு அசைவ விருந்து படைத்து மகிழ்ந்துள்ளனர். அந்த வகையில் டி.ஜே.ஞானவேல் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் படக்குழுவினருக்கு உணவு பரிமாறும் புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் அந்த விழாவில் டிஜே ஞானவேல், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை என்றால் வேட்டையன் படம் சாத்தியம் கிடையாது. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்கு பிறகு கதையை சார்ந்த ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படைப்பு சுதந்திரத்துடன் வெளியாவதற்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றி. வேட்டையன் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது;” என்று தெரிவித்துள்ளார்.