தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை
தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை – அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை வருமான வரி தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
கடந்த பல்வேறு கால கட்டங்களில் (நிதி ஆண்டுகளில்) வருமானவரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சம்மன்களை வருமான வரித்துறை அனுப்பியுள்ள நிலையில், வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நீதிபதி பி.வி. நாகரத்தினா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே வருமானவரித்துறை இரண்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், மூன்றாவது நோட்டீஸ் அண்மையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மக்களவைத் தேர்தல் நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது என நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டி வாதிட்டார்.
அப்போது வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, மக்களவைத் தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 1,700 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்க வருமானவரித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்தார்.
https://www.mugavari.in/today-weather-report/
வருமானவரித் துறை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பு வழக்கறிஞர் ஆச்சரியம் தெரிவித்த நிலையில், எப்போதும் எதிர் தரப்பை எதிர்மறையாக நினைக்க கூடாது என நீதிபதிகள் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள் வருமானவரித்துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என அமலாக் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.