கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை. நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் இன்டூர் அருகே எச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே காரில் வந்து கொண்டிருந்த திராவிட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் என்பவரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 20 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து, அடித்து உதைத்ததாகவும், இதில் காயமடைந்த நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை, இவருக்கு ஒதுக்கீடு செய்ததற்கு ஆத்திரமடைந்த நிலையில் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து அதன் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆறுமுகம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல நாம் தமிழர் கட்சியின் சார்பில் மறைந்த வீரப்பனின் மகள் வித்யாராணி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று, ஆறுமுகத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், இவரது கட்சி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அவர்களது கட்சி சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இன்று, தனது வேட்பு மனு ஏற்கப்பட்டதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து ஓசூர் நோக்கி ஆறுமுகம் வந்து கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
மேலும், இந்த சின்னத்தில் போட்டியிடக் கூடாது, என்றும் கூறி, அப்படி இல்லை என்றால், கொலை செய்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ஆறுமுகம் புகார் தெரிவித்துள்ளார்.
இதில் காயமடைந்த ஆறுமுகம், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் வேட்பாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.